புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் முத்தமிழ் விழா ’இழந்தமிழோசை-19’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தலைமைற்றார்.
இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பன்முகத்தன்மையோடு விளங்குகின்றனர் என்றும் மருத்துவ மாணவர்களின் தமிழ் குறித்த தனித்தன்மையை வளர்க்கும் விதமாக அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ்மன்றங்கள் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், "மத்திய அரசு கேட்ட அனைத்து ஆவணங்களையும் உரிய நேரத்தில் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்ததால் ஒரே ஆண்டில் ஆறு புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக விரைவாக மருத்துவக்கல்லூரிக்கான கட்டட பணிகளைத் தொடங்கவுள்ளோம்.
அதில், இந்த ஆண்டு கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க முதலமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்"என்றார்.
இதையும் படிங்க: மணிவாசகத்தின் மனைவி, சகோதரிக்கு பரோல் வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்!