புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, திருச்சி சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையிலான காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய கடந்த 4 மாத காலங்களாகத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இந்த வழக்குத்தொடர்பாக வேங்கைவயல், இறையூர், காவேரி நகர், கீழமுத்துக்காடு, மேலமுத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களில் 147 பேரிடம் விசாரணை மேற்கொண்டு சாட்சியங்கள் பெற்றுள்ள நிலையில், தற்போது அதில் 11 நபர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக ரத்த மாதிரி சேகரிக்க நீதிமன்றத்தின் ஆணையை பெற்றுள்ளனர்.
இதனிடையே அந்த 11 நபர்களில் முதல் நபரான காவல் துறையில் பணியாற்றும் வேங்கை வயல்கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா மற்றும் 9ஆவது நபரான கண்ணதாசன் ஆகிய இருவருக்கும் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும்; அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இருவரும் இன்று காலை 11 மணிக்கு சென்னை தடயவியல் ஆய்வகத்தில் குரல் மாதிரி பரிசோதனைக்காக ஆஜராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக வேங்கைவயல் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி கண்டறியப்பட்டதற்கு முன்னதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் உருவாக்கியிருந்த வாட்ஸ்அப் குரூப்பில் முரளிராஜா, கண்ணதாசன் உள்ளிட்டோர் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சில தகவல்களை குரலாகப் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த குரல் பதிவு சிபிசிஐடி காவல் துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து உறுதி செய்ய தற்போது இருவரிடமும் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளனர். இருவரும் மாநில தடயவியல் துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். இவர்களிடம் குரல் மாதிரி சோதனை செய்யப்பட்டு மூன்று மணி நேரம் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்த அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகி இளமுருகு, காவல் துறை முறையாக விசாரிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 120 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை இருப்பதாகவும், காவல் துறை மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியவற்றிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சிபிசிஐடியிடம் மாற்றப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களிடமே விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி, நீர்த் தொட்டியில் கலக்கப்பட்ட மலத்திலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ-வை வைத்து மலம் கழித்தவர்கள் யார் என காவல் துறையினர் தேடி வருகிறார்களே தவிர, மலம் கலந்தவர்கள் யார் என காவல் துறை கண்டுபிடிக்காமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பேமலி பேக் ஐஸ்கிரீமில் விஷம்.. சிறுவன் பலி; உறவினர் கைது.. கேரளாவில் நடந்தது என்ன?