புதுக்கோட்டை: விஸ்வதாஸ் நகரில் மூர்த்தி என்பவர் நாட்டுப் பட்டாசுகள் தயாரிக்கும் வானப் பட்டறை வைத்துள்ளார். இவர் அரசின் உரிமை பெற்றுக் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்குத் திருவிழா மற்றும் திருமணம் காலங்களில் வேடிக்கை பட்டாசுகள் தயார் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (டிச 05) காலை வழக்கம் போல் இதன் உரிமையாளர் மூர்த்தி என்பவர் பணிகளைத் தொடங்கியுள்ளார். இங்கு பணியாற்றும் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வருவதற்குக் காலதாமதம் ஏற்பட்டதால் தானே பட்டாசுகள் தயாரிக்கும் பணியைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் திடீரென்று தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தொழிற்சாலையிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இரண்டு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடி விபத்தில் அங்கு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிற்சாலையின் உரிமையாளர் மூர்த்திக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் மூர்த்தி 108 ஆம்புலன்ஸ் மூலமாகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதன் பின்னர் தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் தயாராகும் 40 இருமல் மருந்துகள் தரமற்றவை..? - தர பரிசோதனை முடிவில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!