புதுக்கோட்டை : தந்தையுடன் அமர்ந்து சாளரக் கதவொன்றிற்கான வடிவத்தை ஓவியமாக வரைந்து, அதை நீண்ட உளி கொண்டு மெல்ல தட்டித் தடவி, மரப்பலகையை மெள்ளத் தோண்டி, தான் வரைந்த வடிவத்தை புடைப்புச் சிற்பமாக்கிக் கொண்டிருக்கிறார் அஞ்சனாஸ்ரீ. மகள் தொழில் நேர்த்தி பழகும் வேகத்தில் மனம் லயித்தபடி அவளுக்கு வேலையின் நுணுக்கங்களை கற்பித்துக் கொண்டிருக்கிறார் அவளுடைய அப்பா.
விடுமுறைக் காலப் படிப்புகள், ஆன்லைன் விளையாட்டுகள் எனக் கழிய வேண்டிய அஞ்சனாவின் கரோனா பொது முடக்க நாட்கள் அப்பாவிடம் விரும்பி பெறும் மரவேலைகளுக்கான பயிற்சியில் கரைகிறது. புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் பகுதியிலுள்ள ஒரு கலைக்குடும்பத்தின் மூத்த மகள் அஞ்சனாஸ்ரீ, அவளது அப்பா முத்துக்குமார், அம்மா கவிதா, உடன் பிறப்புக்களாக ஆயிஷாஸ்ரீ, தேஜாஸ்ரீ என இரண்டு தங்கைகள்.
அஞ்சனா அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவி. சிறுவயது முதலே மரத்துண்டங்களின் மேனியை மெல்லத் தடவி, வலிக்காமல் வெட்டியெடுத்து, அதற்கு உருவம் கொடுக்கும் அப்பாவின் கை செய்யும் வித்தைகளைப் பார்த்து வளர்ந்த அஞ்சனாவின் மனதிற்குள் அது ஆழமாகப் பதிந்து விட்டது. நாட்டியமும், சிலம்பமும் கற்று வந்தாலும் அஞ்சனாவிற்கு மரபு தந்த திறமை, தனக்கான சரியான தருணத்திற்காக காத்திருந்தது. பலருக்குள் பல மாற்றங்களை விதைத்திருக்கும் பொது முடக்கம், அஞ்சனாவிற்குப் புதிய பாதைக்கான வழியையும், திறமைக்கான வாசலையும் திறந்து விட்டிருக்கிறது.
விடுமுறையில் ஒரு நாள் அப்பாவிடம் தானும் மர வேலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார், அஞ்சனாஸ்ரீ. மகள்களின் விருப்பங்களைத் தவிர்க்க தெரியாதவர்கள் அப்பாக்கள். தன் மகளின் முடிவுக்கு சந்தோசமாய் இசைந்திருக்கிறார், முத்துக்குமார்; விளைவு மரப்பலகைகளில் வடிவங்கள் வரையவும், வரைந்ததற்கு வெட்டி எடுத்து வடிவம் கொடுக்கவும் பழகியிருக்கின்றன, அஞ்சனாவின் மென்பஞ்சு விரல்கள்.
இயந்திரங்களின் உதவி இல்லாமல், மரபு மாறாமல் மனதின் எண்ணங்களுக்கு மரங்களில் வடித்தெடுக்கும் முத்துக்குமாரின் திறமைக்கு கட்டியம் கூறுகின்றன, திருவப்பூர் மாரியம்மன் கோயில் கருவறைக் கதவும், பெருமாள் கோயில் சொர்க்க வாசல் கதவும். தற்போது அந்த வித்தைகளைக் கற்றுத்தேற தொடங்கியிருக்கிறாள், அஞ்சனா.
"நான் இப்போது மரப்பலகையில் படம் வரைவது, செதுக்குவது, வண்ணம் தீட்டுவது என அனைத்தையும் கற்றுக் கொண்டேன்" என, தன் கொஞ்சும் மொழியில் பேசுகிறாள், இந்த வளரிளம் பெண்.
பரம்பரைப் பரம்பரையாய் பரிமாறப்பட்டு வந்த மரபுக்கலையை, தனக்குப் பின் கடத்துவதற்கு ஆள் இல்லையே என்று ஏங்கிய முத்துக்குமாருக்கு அஞ்சனாவின் வார்த்தைகள் நம்பிக்கையை விதைத்திருக்கின்றன. அதனால், மகளின் விருப்பத்தைக் கூடுதல் சிரத்தையுடன் நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறார்.
"ஒருநாள் என்னிடம் வந்த அஞ்சனா, அப்பா எனக்கும் மரவேலைகள் சொல்லித் தாங்கனு கேட்டாள். அவளின் ஆர்வம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நான் அவள் விருப்பத்தை நிறைவேற்ற மரவேலைப்பாடுகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். இப்போது ஓரளவிற்கு கற்றுக் கொண்டாள். எனக்குப் பின்னர் நல்ல மரவேலை செய்பவளாக அவள் வருவாள்" எனத் தன் மகளின் தொழில் நேர்த்தியை வியக்கிறார், இந்த தந்தையாசிரியன்.
![தந்தையாசிரியருடன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-special-story-about-13-age-girl-carpntr-work-form-her-father-visual-img-scr-7204435_17122020171442_1712f_1608205482_970.jpg)
இயந்திரமயமாகிவிட்ட மனித வாழ்க்கையில், ஒரு வேலைக்குரிய நியாயமான நேரம் கொடுத்து, அதை நேர்த்தியுடன் உருவாக்கும் பொறுமை யாருக்கும் இல்லை. இதனால், மெல்லிய மரங்களில் இயந்திரங்களினால் உருவாக்கப்படும் ஆயத்த மரவேலைப்பாடுகளை மக்கள் நாட ஆரம்பித்து விட்டார்கள். இதனால் மரபுவழித் தொழிலான கைவேலைப்பாடுகளை செய்து வரும் முத்துக்குமார் பொருளாதாரத்தில் கொஞ்சம் நலிவடைந்தே இருக்கிறார்.
தன் எதிர்காலம் மீதான அதீத நம்பிக்கையில், அப்பாவிடம் தொழில் பழகத் தொடங்கி வருகிறாள், அஞ்சனா. "மரவேலைப்பாடுகளுக்கு இப்போ நிறைய இயந்திரங்கள் வந்து விட்டன. ஆனால், கையால் செதுக்குகிற அளவுக்கு அழகா இயந்திரங்களால செதுக்க முடியாது. அப்பாவிடம் இந்த மரவேலைப்பாடுகளைக் கற்றுக்கொண்டு, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வேன். அதே மாதிரி மகன் இல்லாத குறையை நான் தீர்த்து வைப்பேன்" நம்பிக்கையுடன் பேசுகிறார், தந்தைக்குத் தோள் கொடுக்கத் தொடங்கியிருக்கும் இந்த வளரிளம் பெண்.
தங்கம், கைத்தறி தொழில் போன்ற வீட்டில் அமர்ந்து பார்க்கும் மரபுத் தொழில்களில் தான் பெண்கள் அதிகம் ஈடுபடுவது வழக்கம். அதிக உடல் உழைப்பைக் கோரும் மரவேலை போன்ற மரபுத் தொழில்களில் பெண்கள் ஈடுபடுவதில்லை.இந்த விதியை மாற்றி மரபை மீட்டெடுக்கும் அஞ்சனாஸ்ரீயின் பயிற்சியும் முயற்சியும் பகுதி வாசிகளின் அன்பையும் ஆசிகளையும் பெற்றுள்ளன.
இந்த வளரிளம் மங்கைக்கு வருங்காலம் வசமாகட்டும்...
வாழ்த்துகள் மகளே!
இதையும் படிங்க: வெளிச்சத்தைத் தேடும் பார்வை மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள்!