புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, “சீனாவிலிருந்து சென்னை வரும் அனைத்து பயணிகளையும் சென்னை விமான நிலையத்தில் முழு பரிசோதனை செய்து அனுப்பப்படுகின்றனர்.
இதுவரை 242 பேர் தமிழ்நாடு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முழு பரிசோதனை செய்யப்பட்ட பின் சுகாதாரத் துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்கள் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் எச்சரிக்கையோடு இருந்து வருகிறோம்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சீனாவிலிருந்து வந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக வந்த செய்தி தவறானது.
அவருக்கு முழு பரிசோதனை செய்து வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை கூறிள்ளது. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு தேவையான மருந்துகள் வைக்கப்பட்டு அரசு தயார் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றமோ பீதியோ அடைய வேண்டாம்.
பள்ளிகளுக்கு சென்றுவரும் மாணர்கள் கடைவீதிக்குச் சென்று வருபவர்கள் கூட்டமான மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று வருபவர்கள் வீடு திரும்பியதும் சோப்பு போட்டு கைகளை கழுவும் பழக்கம் வேண்டும். இந்த பழக்கம் நோய் பரவலை தடுக்கும்" என்றார்.
இதையும் படியுங்க: சீனாவிலிருந்து தி.மலை வந்த பொறியாளர்: பற்றிக்கொண்ட 'கொரோனா' பீதி!