தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 500 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 2,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 250 பேர் குழந்தைகள். எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தற்போது தாழ்வு மனப்பான்மையால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களிடம் இல்லாத காரணத்தினால் இந்நோய் என்னவென்றே தெரியாமல் இருக்கின்றனர்.
இவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் புகட்டும் விதமாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள துணைவன் என்கிற தன்னார்வ அமைப்பினர் இரண்டு நாள் சிறப்பு முகாமை நடத்தினர். இந்த முகாமில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியினை குழந்தைகள் பழகு முகாம் என்ற பெயரில் நேற்றும், இன்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக துணைவன் அமைப்பினர் நடத்தினர்.
இதுகுறித்து, துணைவன் அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில்," எச்ஐவி என்பது மிக கொடிய நோய். ஆனால் தொற்று நோய் கிடையாது. அவர்களை இந்த சமுதாயமும் ஒதுக்கி வைப்பது மட்டுமே வழக்கமாக கொண்டிருக்கிறது. எச்ஐவியால் பாதிக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகள் காப்பகங்களிலும், ஆதரவற்ற நிலையிலும், பெற்றோர்கள் இல்லாமலும் இருக்கின்றனர்.
அவர்களும் இந்த சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடமாடவேண்டும். இறுதி மூச்சு வரையிலும் அவர்கள் நன்றாக அனைவரிடமும் பழக வேண்டும் என்ற நோக்கத்தில் முகாமை நடத்துகின்றோம். எந்த ஒரு பாவமும் அறியாத இந்த குழந்தைகளுக்கு இப்படி ஒரு நோய் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அரசாங்கமே மெனக்கெட்டு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை தாழ்த்தி நடத்தாமல் சமுதாயத்தில் ஒரே மாதிரியாக நடத்தி அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்" என்று தெரிவித்தனர்.