கடந்த சில நாள்களுக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 13 வயது சிறுமியை அவருடைய தந்தையே நரபலி கொடுத்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிறுமியை நரபலி கொடுத்த அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.
தற்போது இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் கூறியதாவது, "கடந்த 18ஆம் தேதி காலை நொடியூர் கிராமத்தில் சிறுமி சடலமாக கிடப்பது குறித்து தகவலறிந்து கந்தர்வகோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிறுமி இரண்டு மணி நேரத்திலேயே உயிரிழந்தார்.
சிறுமியின் தாய் இந்திரா கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் தனது பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினரிடம் புகாரளித்தார். இந்தப் புகாரின் பேரில் முதல்கட்டமாக விசாரணை செய்தபோது உடற்கூறாய்வு அறிக்கையின்படி சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என்பது உறுதியானது.
சிறுமியின் தந்தைக்கு பல பெண்களுடன் தொடர்பு
அதன்பின் சிறுமியை யார் கொலை செய்திருப்பார்கள் என்பதைக் கண்டறிய 8 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தோம். இந்நிலையில், சிறுமியின் தந்தை மேல் சிறிய சந்தேகம் ஏற்பட்டு அவரை பற்றி விசாரிக்க தொடங்கினோம். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சிறுமியின் தந்தை பன்னீர்செல்வத்திற்கு இரண்டு மனைவி இருப்பதாகவும், இன்னும் சிலருடன் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது. ஏற்கனவே முதல் மனைவிக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பன்னீரின் இரண்டாவது மனைவி மூக்காயி மற்றும் அவருக்கு தெரிந்தவரான முருகாயி, மாந்திரீகம் செய்யும் வசந்தி ஆகியோருடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.
மாந்தரீகம் தெரிந்த வசதியின் சதி திட்டம்
இதில், மாந்திரீகம் தெரிந்த வசந்தி என்பவர் உனது பிள்ளைகளில் ஒருவரை பலி கொடுத்தால், உனக்கு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். புதையல் கிடைக்கும், வசதியாக வாழலாம் ஆண் குழந்தைகள் பிறக்கும் என்று ஆசை வார்த்தைகளை பன்னீரிடம் தெரிவித்துள்ளார். பேராசையில் திளைத்த பன்னீர் கடந்த 17ஆம் தேதி இரவு முருகாயி, மூக்காயி மற்றும் உறவினர் குமார் ஆகியோரின் உதவியோடு நரபலிக்கான பூஜையை நடத்தியுள்ளார். இதனையடுத்து வருகின்ற பௌர்ணமிக்கு இரண்டாவது மகள் அல்லது மூன்றாவது மகளை பலிகொடுக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

பேராசை பிடித்த தந்தையால் சிறுமி கொலை
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி காலை குழந்தையை காணவில்லை என இந்திரா மற்றும் அவரது சகோதரிகள் பலர் தேடி வந்தனர். அப்போது, குழந்தையின் சத்தம் கேட்டு தாய் இந்திரா சென்று பார்த்தபோது கற்பழிக்கப்பட்ட கோலத்தில் சிறுமி கிடந்துள்ளார். ஆனால், அன்று காலை தண்ணீர் எடுக்கச் செல்லுமாறு இரண்டாவது குழந்தை மற்றும் வித்யாவை பன்னீர் வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து, சிறுமி வித்யா குடத்தை எடுத்துக்கொண்டு ஊற்று பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, சிறுமி வருவதை எதிர்பார்த்திருந்த பன்னீர் செல்வம், குமார், மூக்காயி ஆகியோர் குழந்தையை தைல காட்டிற்குள் அழைத்துச் சென்று அவரது வாயை பொத்தி சிறுமியின் துண்டால் கழுத்தை நெறித்துள்ளனர்.
பன்னீர் செல்வத்தின் சாமர்த்தியம்
பின்னர், சிறுமி இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு பன்னீர் வழக்கம்போல் ஊருக்குள் சுற்றித் திரிந்துள்ளார். குழந்தையை காணவில்லை என தேடும்பொழுது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுவரை எந்த வழக்கிலும் இல்லாத அளவிற்கு கழுத்து நரம்புகள் எலும்புகள் போன்றவற்றை உடைத்து நெரித்து கொலை செய்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை தந்தது. தற்போது, பன்னீர்செல்வம் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தொடர்புடைய இரண்டாவது மனைவி இரண்டு நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

காவல் துறை விசாரணை தொடரும்
அவரது இறப்பிலும் மர்மம் இருக்கிறதா என விசாரித்துக் கொண்டிருக்கிறோம். வசந்தி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முருகாயி என்பவரை தேடி வருகிறோம். பன்னீர் தனது மேல் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சிறுமியின் உள்ளாடைகளை கலைத்துவிட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டது போல நாடகம் ஆடிக்கொண்டிருந்தார் அவரது நடவடிக்கைகள் மற்றும் பூஜைக்கு தேவையான சாமான்களை வாங்கியது உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்தோம்" என்றார்.
இதையும் படிங்க: ஆண் குழந்தை மோகம்: பெற்ற மகளை நரபலி கொடுத்துவிட்டு நாடகமாடியவர் கைது!