பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டாட்சியராக இருப்பவர் கவிதா. இவர் பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசும் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெரம்பலூர் அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர் விடுதியை, கரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இந்த வார்டில், சென்னை கோயம்பேட்டிலிருந்து பெரம்பலூர் திரும்புவர்கள் தங்கவைக்கப்படுவார்கள்.
இந்நிலையில், பசும்பலூர் கிராம மக்கள், இங்கு தனிமைப்படுத்தும் கரோனா வார்டு வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கைககளில் மருந்து பாட்டில், மண்ணென்ணெய் ஆகியவற்றை வைத்து கொண்டு தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்துள்ளனர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த வட்டாட்சியர் கவிதா, எதிர்ப்பு தெரிவித்த மக்களை தரக்குறைவாக, மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர் பேசிய காணொலி டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, தரக்குறைவாக பேசிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டிக்-டாக் செயலி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மதுரை இளைஞர்!