பெரம்பலூர்: வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், பாண்டகப்பாடி, லப்பைகுடி காடு, அகரம் சித்தூர் மற்றும் கீழப்பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் வடக்கு எல்லை பகுதியில் நேற்று முந்தினம் இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அதிவேகமாக இரண்டு விமானங்கள் தாழ்வாக பறந்து கொண்டு இருந்தன.
பயங்கர சத்தத்துடன் வலம் வந்து கொண்டிருந்த இந்த விமானத்தை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர் பகுதியில் மீண்டும் விமானம் பறக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. காலை சுமார் 11 மணி அளவில் பெரம்பலூர், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் எல்லையோர பகுதியில் பயங்கர வெடி சத்தம் ஏற்பட்டதை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்.
பல கிலோமீட்டர் தூரம் அளவிற்கு சத்தத்தை உணர்ந்த பொதுமக்கள் இது விமான விபத்தாக இருக்கும் என்று அச்சமடைந்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள பொதுமக்கள் விமான விபத்து நடந்திருக்கலாம் என்ற அனுமானத்தின் பேரில் வனப்பகுதிகளில் சல்லடை போட்டு தேடத் தொடங்கினர்.
இருப்பினும் அது போன்ற எந்த விதமான விபத்து நடந்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெறவில்லை. மேலும் சிலர் விபத்து ஏற்பட்டு விட்டதாக கூறி 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்ததால் பதட்டமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.
இதனையடுத்து வேப்பந்தட்டை பெரம்பலூர் மற்றும் குன்னம் வட்டாட்சியர்கள், காவல் துறையினர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் சுற்றிவந்து விபத்து ஏதேனும் நடந்துள்ளதா, என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு . இருப்பினும் விபத்து நடந்ததற்கான தடயங்களோ அல்லது அப்பகுதியில் உள்ள குவாரிகளில் வெடி வைக்கப்பட்டதற்கான தடையங்களோ கிடைக்கப் பெறவில்லை.
இதனை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும் அதனை உறுதி செய்யவில்லை. இதுகுறித்து, தஞ்சையிலுள்ள விமான பயிற்சி மையத்தில் இருந்து வான்வெளியில் சுற்றிவந்த அதிவேக விமானங்கள் சில நேரங்களில் இதுபோன்ற பயங்க சத்தத்தை வெளிப்படுத்தலாம் என்றும், விபத்து ஏற்பட்டு இருந்தால் இந்நேரம் விமானப்படை தளத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் பதட்டமும், பரபரப்பும் ,பீதியும் அடங்காத நிலையில் பொதுமக்கள் மாலை வரையில் மாவட்டத்தின் எல்லையோர பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் விபத்து நடந்துள்ளதா என்று கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தவண்ணம் இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எல்லாத்தையும் டெலிட் பண்ணிடுங்க- பாலியல் சீண்டல் செய்த ஆசிரியரின் பகீர் ஆடியோ