விவசாயத்தை முதன்மையாக கொண்டது பெரம்பலூர் மாவட்டம். பருத்தி, மக்காச்சோளம், சிறிய வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 70க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதனிடையே கடந்த 3 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யாததாலும், வரட்சியின் காரணமாகவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
இந்நிலையில், நொச்சியம் கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி, ஏழு ஏரியை தூர் வாரும் பணியை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக ஏரியில் உள்ள கருவேல மரங்கள், வரத்து வாய்க்காலில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு தங்கு தடையின்றி நீர் வருவதற்கு ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், அரசை நம்பாமல் கிராம மக்களால் ஏறி தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு நீர் வருவதன் மூலம் கிராமத்தில் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றனர். இதே போன்று அனைத்து கிராமங்களிலும் இளைஞர்கள் முன்னெடுத்து தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.