பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. இதில் பூலாம்பாடி, கடம்பூர், புதூர், அரசடிகாடு, மேலகுணங்குடி ஆகியப்பகுதிகளை உள்ளடக்கியது. பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில், 10 ஆயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூலாம்பாடி பேரூராட்சிப்பகுதிகளில் சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிவு நீர் கால்வாய் ஆகிய அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் உள்ளன.
இதனையடுத்து பூலாம்பாடியைச்சேர்ந்த மலேசிய நாட்டு தொழிலதிபர் பிரகதீஸ்குமார், பூலாம்பாடி பேரூராட்சி அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மொத்தம் ரூ.33 கோடி மதிப்பீட்டில் செய்து தர முடிவு செய்யப்பட்டு, இதில் டத்தோ பிரகதீஸ்குமாரின் பிளஸ் மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேஷன் சார்பில் ரூ.13 கோடி பங்களிப்புத்தொகையாக தர உறுதியளித்துள்ளார்.
இதற்காக முதற்கட்டமாக பிரகதீஸ்குமார் முதல்தவணை தொகையாக அவரது பிளஸ் மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேஷன் சார்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ரூ.90 லட்சத்திற்கான வரைவோலையை பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இன்று 60.20 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை பேரூராட்சி செயலாளரிடம் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் தொழிலதிபர் பிரகதீஷ்குமார் தெரிவிக்கையில், 'இதன் மூலம் பூலாம்பாடி பேரூராட்சியில் சாலை, குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய், உயர்மட்ட பாலம் அமைத்தல், குடிநீர் கிணறு அமைத்தல் உள்ளிட்டப்பணிகள் நடைபெற உள்ளது’ எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பூலாம்பாடி பேரூராட்சித்தலைவர் பாக்கியலட்சுமி, மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பூலாம்பாடி கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:இயற்கை புகையிலை விற்பனைக்குத் தடையில்லை - உயர் நீதிமன்றக்கிளை