பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் திம்மூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்த ஜெயலட்சுமி என்பவர் மீது டிராக்டர் மோதி உயிரிழந்தார்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் இழப்பீடு கேட்டும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் லாசர் கலந்துகொண்டார்.
கடந்த செப். 16ஆம் தேதி திம்மூர் கிராமத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்த ஜெயலட்சுமி மீது டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவத்தில், அவரின் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். ஜெயலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உயிரிழந்த ஜெயலட்சுமியின் மகன்களின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும்.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் சட்டவிரோதமாக இயந்திரங்களைப் பயன்படுத்திட அனுமதி தந்த ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களைப் பறிமுதல்செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.