கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து, பல பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது மாணவர்களுக்கு ஒருபுறம் சாதகமானது என்றாலும், இதனால் நடைமுறைச் சிக்கல்கள் ஏராளமாக எழுந்துள்ளன.
2017ஆம் ஆண்டு ஜூலை முதல் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஆன்லைன் வசதி பற்றி நடத்தப்பட்ட ஆய்வில், பல மாநிலங்களில் கணிணி மற்றும் இணையசேவைப் பயன்பாடுகள் மிக மோசமாக உள்ளது தெரிய வந்தது.
இதன்மூலம் கிராமங்களில் ஆன்லைன் கல்விக்கான சூழலை ஏற்படுத்துவதற்கு பல மைல்களை நாம் கடக்க வேண்டும் எனத் தெரிகிறது. இந்த ஆன்லைன் கல்வி முறையால் கிராமப்பகுதிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில், பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள நாட்டாரமங்கலம் கிராம மாணவர்கள் இந்த கரோனா சூழலுக்கு மத்தியில் இணைய வசதியின்றி ஆன்லைன் கல்வி பெற முடியாமல் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த நாட்டாரமங்கலம் கிராமத்தைச் சுற்றி, ஈச்சங்காடு, மருதடி, கூத்தனூர் உள்ளிட்ட கிராமங்களும் மலைகளும் உள்ளன.
இக்கிராமத்தில் உள்ள மாணவர்கள், ஆண்ட்ராய்டு அலைபேசி வசதி இருந்தாலும், இணைய வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வேண்டுமென்றால் தங்களின் கிராமத்திலிருந்து மூன்று கிமீ தொலைவில் உள்ள செட்டிக்குளம் கிராமத்திற்கு நடந்து செல்ல வேண்டும் என்கிறார் மாணவி சுருதிகா.
சில மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்குபெறுவதற்காக வீட்டு மொட்டை மாடிகள் போன்ற இணையத் தொடர்பு கிடைக்கும் உயரமான இடங்களுக்கும் வெட்டிவெளிகளுக்கும் வர வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் பாம்பு, விஷப்பூச்சிகள் உள்ளிட்டவைகளின் அச்சுறுத்தல்களுக்கும் மாணவர்கள் ஆளாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பதற்கு கூட, ஊர் எல்லைக்கு வெளியே வர வேண்டிய சூழல் உள்ளது.
இதே ஊரில் உள்ள வசதி பெற்றவர்கள் வை-ஃபை (wi-fi) வசதி மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் நிலையில், வசதியில்லாதவர்கள் மொட்டை மாடியில் குடிசை அமைத்து ஆசிரியர் பேசும் வார்த்தைகளைக் கேட்டும் கேட்காமலும் ஆன் லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.
நாட்டாரமங்கலம் கிராமத்திற்கு டவர் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
கரோனா வைரஸ் ஊரடங்கின் மத்தியில் மாணவர்களுக்கும், வீட்டில் இருந்து பணிபுரியும் இளைஞர்களுக்கும் இணைய வசதி கிடைக்காதது ஒரு தடைக் கல்லாகவே இருந்து வருவதாக வேதனையோடு அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தங்கள் ஊருக்கு செல்போன் டவர் அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே அம்மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: என்னை மாற்றுத்திறனாளி என அடையாளப்படுத்திவிடுங்கள்’ - இருத்தலுக்காகப் போராடும் பெண்!