அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசு மருத்துவர்களின் தகுதியின் அடிப்படையிலும், அனுபவத்தின் அடிப்படையிலும் ஊதிய உயர்வு வழங்கவேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை நிரப்பவேண்டும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பணியிடங்களை குறைக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்களும் இன்று இரண்டு மணி நேரம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரித்தனர்.
கிராமப்புற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த பணி பணிப்புறக்கணிப்பு நடைபெற்றதால், புறநோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மட்டும் பணி புறக்கணிப்பின் காரணமாக சிகிச்சைக்கு வந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருந்து அவதியடைந்தனர்.