பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 7ஆவது வார்டு, புதிய மதனகோபாலபுரம் டயானா நகர்ப் பகுதியில் வசிப்பவர் வைத்தியலிங்கம் விவசாயியான இவர் ஐந்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகளை வளர்த்துவந்தார். இதற்காக இவரது வீட்டிற்கு அருகில் சுமார் 6 அடி உயரத்தில் ஹாலோபிளாக் கல்லால் கட்டப்பட்ட மாட்டுக் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மாட்டுக் கொட்டகையை மாற்றி அமைத்து, அதனைக் கடையாக மாற்றுவதற்காக நேற்று லாரி மூலமாக கிராவல் மண் கொண்டுவந்து கொட்டப்பட்டது. அதன்பின் அந்த மண் முழுவதும் ஜேசிபி மூலமாக மாட்டுக் கொட்டகையின் உள்பகுதியில் நிரப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாலை சுமார் 5 மணியளவில் வைத்தியலிங்கத்தின் மனைவி ராமாயி, மாமியார் பூவாயி வைத்தியலிங்கத்தின் அண்ணன் கலியபெருமாள் மனைவி கற்பகம் ஆகிய மூவரும் மாட்டுக்கொட்டகை கிழக்குப் புறச் சுவரின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென மாட்டுக்கொட்டகை சுற்றுச்சுவர் இடிந்து பேசிக்கொண்டிருந்த மூன்று பெண்கள் மீதும் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த, அவர்கள் மூவரையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதில் ராமாயி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து கற்பகமும், அதனையடுத்து பூவாயியும் என மூவரும் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.