பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரனாரை பிரிவு ரோடு பகுதி ஏவிஆர் நகரில் வசித்துவருபவர் பானு. காரைக்குடியைச் சேர்ந்த இவர், பெரம்பலூரில் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பானு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு இன்று வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 14 சவரன் நகை 30 ஆயிரம் பணம், 4 ஜோடி வெள்ளிக்கொலுசு உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதேபோல் மதன கோபாலபுரம் பாரதிதாசன் நகர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா தேசிங். ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்திவரும் இவர், வாடகை வீட்டில் வசித்துவருகிறார். கடந்த திங்கட்கிழமை வெளியூருக்குச் சென்றுவிட்டு இன்று ராஜா தேசிங் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த, 7 சவரன் நகை ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கல்யாண்நகர் பகுதியில் ராஜசேகர் என்பவரது வீட்டிலும் ஒரு பட்டுப் புடவையை திருடிச் சென்றுள்ளனர்.
பெரம்பலூர் நகர்ப்புற பகுதிகளில் மூன்று வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் தலையில் ஏறி உயிரைப் பறித்த லாரி - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!