பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகேவுள்ள அபிராமபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராணி. இவர், ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவரும், அவரது மகனும் வீட்டை பூட்டிவிட்டு அருகேவுள்ள புதிதாக கட்டப்படும் வீட்டில் இரவு தங்கியுள்ளனர்.
இதையடுத்து, நேற்று (ஆகஸ்ட் 07) காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 3 சவரன் தங்க நகை, ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் ரொக்கம், லேப்டாப் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு
மேலும், ராணியின் வீட்டின் அருகிலுள்ள சின்னபிள்ளை என்பவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டிற்குள்ளும் நுழைந்த திருட்டு கும்பல் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மூன்றாவதாக ஒரு வீட்டில் இருந்த இரண்டு செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பெரம்பலூர் நகர காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து மூன்று வீடுகளிலும் சோதனை செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஒரே நாளில் தொடர்ந்து மூன்று வீடுகளில் கைவரிசை காட்டிய திருட்டு கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டை அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது