பெரம்பலூர் மாவட்டம் குன்னம், பெரம்பலூர் என இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. மேலும் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் என நான்கு வட்டங்களையும் மற்றும் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் என நான்கு ஒன்றியங்களையும் கொண்டுள்ளதாகும்.
மாவட்ட நகராட்சியானது 21 வார்டுகளை உள்ளடக்கியது. இந்நிலையில் மாவட்ட நகர்ப்புறத்தில் உள்ள அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்றோர்கள் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
கரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வெளியே வராததால் அவர்கள் யாசகம் கூட கேட்க முடியாத நிலைமையில் உள்ளனர். இதனால் அவர்களது வாழ்க்கை மேலும் சோகமாகியுள்ளது.
மாவட்டத்தில் வசிக்கும் ஆதரவற்றோர்கள் குறித்து செட்டிகுளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விஜய் கூறியதாவது, "பொதுவாக ஆதரவற்றோர்கள் சாலை ஓரங்களிலும் பேருந்து நிழற்குடைப் பகுதியிலும் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர். கரோனா ஊரடங்கு ஒட்டுமொத்த மக்களையே புரட்டிப்போட்ட நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுபோன்ற ஆதரவற்றோர்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள கோயில் நிர்வாகம் சார்பில் உணவு, இருப்பிடம் வழங்கினால் நன்றாக இருக்கும்" என்று கூறினார்.
"பெரம்பலூரில் ஏராளமான ஆதரவற்றோர்கள் உள்ளனர். கரோனா ஊரடங்கால் அவர்கள் உணவின்றித் தவித்து வருகின்றனர். எனவே, ஆதரவற்றோர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும். அரசு பெரம்பலூரில் உள்ள ஆதரவற்றோர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு வீடு உள்ளிட்டவற்றை கொடுத்து, அவர்களது தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்" என்கிறார், சமூக ஆர்வலரும் இந்தோ அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளருமான செல்வகுமார்.
மேலும் மாவட்டத்தில் வசிக்கும் ஆதரவற்ற பெண்மணி மகிளாம்பாள் தெரிவிக்கையில், "எனக்கு வீடு இல்லாததால் குடும்ப அட்டை இல்லை. ஆதார் அட்டை இல்லை. நான் 25 வருடங்களாக ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறேன். தற்போது நான்கு ரோடு பாலத்திற்கு அடியில் வாழ்ந்து வருகிறேன்.
மழைக் காலங்களில் எங்களால் இங்கு இருக்க முடியவில்லை. கரோனாவால் மேலும் தவித்து வருகிறேன். அரசு எங்களுக்கு உதவ வேண்டும்" என வேதனையோடு தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவால் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள்