பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கதுரை. இவரது மகன் கோபிநாத் (14), தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார். இவரது தந்தை தற்பொழுது சிங்கப்பூரில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில், கோபிநாத் நண்பர்களுடன் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள மணியார் குட்டை பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.
ஏரிப் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட பள்ளத்தில், கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாக குட்டையில் பாதி அளவு தண்ணீர் இருந்துள்ளது. இதனிடையே தண்ணீர் இருந்த பள்ளத்தின் ஆழமான பகுதிக்கு குளிக்கச் சென்ற கோபிநாத், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் நீரில் மூழ்கியவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அரும்பாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.