பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில் சன்னதியில் தற்காலிக அர்ச்சகராக பணிபுரிபவர் சக்கரவர்த்தி.
இவர் தன்னை பணி நிரந்தரம் செய்வதற்காக கோயில் செயல் அலுவலர் மணியிடம் சென்று கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் ரூ.50ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
பணம் தர மனமில்லாத சக்கரவர்த்தி, பெரம்பலுர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஆலோசனையின் பேரில், கோயில் செயல் அலுவரிடத்தில் முதற்கட்டமாக ரூ20 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்த போது, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவருக்கு உதவியாக இருந்த எழுத்தர் புகழேந்தியையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்சம் வாங்கியதாக கோயில் செயல் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரை மாவட்ட நீதிமன்றங்களை திறக்கக் கூடாது - உயர் நீதிமன்றம்