பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய இடங்களில் பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தற்பொழுது மாவட்டம் முழுவதும் ஆடி, புரட்டாசி பட்டத்துக்காக விவசாயிகள் நிலத்தை உழுது தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலத்திற்கு மேலும் மண்வளத்தை கூட்டும் ஆட்டுக்கிடை அமைப்பதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக பாடாலூர், செட்டிகுளம், தம்பிரான் பட்டி, சத்திரமனை, பொம்மனை பாடி, சிறுவாச்சூர் உள்ளிட்ட விவசாய நிலங்களில் விவசாயிகள் ஆட்டுக்கிடை அமைத்து வருகின்றனர்.
ரசாயன உரங்கள் தெளிப்பதன் மூலம் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால், காலம் காலமாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஆட்டுக்கிடை போடுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சொந்தமாக ஆடு வைத்திருப்பவர்கள் தங்களது நிலத்தில் ஆட்டுக்கிடை அமைத்து வருகின்றனர். மேலும் மற்ற விவசாயிகள் ஒரு நாளைக்கு ரூ. 100 முதல் ரூ. 300 வரை ஆட்டின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆட்டுக்கிடை அமைப்பவர்களிடம் பணம் கொடுத்து வருகின்றனர்.
விவசாய நிலத்தில் மூன்று முதல் 10 நாள்கள் வரை ஆட்டுக்கிடை விடும்போது, மண்ணிற்கு இயற்கையாகவே சத்து அதிகரிக்கப்படுகிறது. மேலும் நிலமானது சமநிலைப்படுத்தப்பட்டு நீர் பிடிப்புத் திறன் கூடுகிறது.
இது குறித்து ஆட்டுக்கிடை அமைக்கும் சேகர் கூறுகையில், "பெரம்பலூர் மாவட்டத்தில் தற்பொழுது ஆடி, புரட்டாசி பட்டத்திற்காக சின்னவெங்காயம் மட்டுமின்றி அனைத்து பயிர்களுக்கும் விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டுக்கிடை அமைப்பதன் மூலம் மண்ணின் வளம் கெடாமல் இயற்கையாக மண்புழுக்கள் அதிகமாகிறது. 15 ஆண்டுகளாக ஆட்டுக்கிடை அமைத்து வருகிறேன். ஆட்டுக்கிடையால் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் எடை அதிகமாகிறது" என்றார்.
"பரம்பரை பரம்பரையாக இந்த ஆட்டுக்கிடை அமைப்பதே எனது தொழில். இதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். செயற்கை உரங்கள் தேவைப்படாது. ஆட்டுக்கிடை மூலம் நன்மை அறிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்துவர்" என்கிறார் ஆட்டுக்கிடை அமைக்கும் பிச்சைமணி.
இதையும் படிங்க: ஆடு வளர்ப்பவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வேண்டும்