பெரம்பலூர்: பூலாம்பாடியில் அரசின் நெல் கொள்முதல் மையம் செயல்பட்டுவருகிறது. பூலாம்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை பூலாம்பாடி நெல் கொள்முதல் மையத்திற்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.
ஒருவாரம் காத்திருப்பு
அந்த நெல் கொள்முதல் மையத்திற்கு தற்போது அதிகளவிலான நெல் மூட்டைகள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுவருகிறது.
அதிகபட்சமாக ஒருவாரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பூலாம்பாடி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளைக் காக்க வைத்துவிட்டு வியாபாரிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வியாபாரிகளின் நெல் மூட்டை
அதன்படி இரவு நேரத்தில் சேலத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் லாரியில் நெல் மூட்டைகளைக் கொண்டுவந்துள்ளார். அவரின் நெல் மூட்டைகளை உடனடியாக இறக்கி கொள்முதல் செய்யப்படுவதை அறிந்த விவசாயிகள் நெல் கொள்முதல் மையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்று அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
முன்னுரிமை வழங்க முடிவு
அலுவலர்களின் துணையோடு இச்செயல் நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டிய விவசாயிகள், தங்களை மட்டும் ஏன் காக்கவைக்கின்றனர் எனக் கேள்வியும் எழுப்பினர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் நெல்லை முன்னுரிமை தந்து கொள்முதல் செய்வதாகக் கூறப்பட்டதை அடுத்து விவசாயிகள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: தீவிரமடையும் போர்... உக்ரைனில் செய்வதறியாது தவிக்கும் தமிழ் மாணவர்கள்!