கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் அலோபதி சிகிச்சையளிப்பதில் மட்டும் கவனம் செலுத்திய தமிழ்நாடு அரசு, தற்போது பாரம்பரியமான சித்தா சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும் 19 இடங்களில் சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தற்போது, பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் பகுதியில் புதிதாக மற்றொரு சித்தா சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா திறந்துவைத்தார்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளில், பிற நோய்களினால் பாதிக்கப்படாதவர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு இம்மையத்தில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இம்மையத்தில் 200 படுக்கைகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி, சிசிடிவி கேமரா என நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு சுழற்சி முறையில் செவிலியர் பணியாற்றுவர். மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர், கீரை வகைகள், பழங்கள், நெல்லிக்காய் சாறு, சுண்டல் உள்ளிட்ட நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கக்கூடிய உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. மேலும் நோயாளிகளுக்கு யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: விரைவில் தமிழ்நாடு முழுவதும் சித்தா கரோனா மையங்கள்!