விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர், செட்டிகுளம், ஆலத்தூர், நாட்டார்மங்கலம், சத்திரமனை, வேலூர், நக்கசேலம், எசனை, நாரணமங்கலம், பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட சின்ன வெங்காயத்திற்கு தனி மவுசு உண்டு என்பதால், வியாபாரிகளும் இதனை வாங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இந்நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் பாண்டியன் என்ற விவசாயி விதைப்பு பணிக்காக வைத்திருந்த 65 கிலோ எடை கொண்ட மூன்று மூட்டை சின்ன வெங்காயத்தை, நேற்று (ஜூலை 15) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
இதனையடுத்து இன்று காலை வயலுக்கு வந்து பார்த்தபோது, பட்டரை போட்டு பாதுகாக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை பார்த்த விவசாயி பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, பாடாலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடப்பட்ட சின்ன வெங்காயத்தின் மதிப்பு ரூ.12 ஆயிரம் ஆகும். மேலும் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் திருட்டு தொடர்கதையாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:ஊரடங்கால் சின்ன வெங்காயம் தேக்கம்