பெரம்பலூர் மாவட்டம், சங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவேல். இவர்மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர், வடக்கு மாதவி சாலையைச் சேர்ந்த அய்யனார், சிவா, ராமராஜ் ஆகிய மூவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனால், இவர்கள் அடிக்கடி ஒருவரை ஒருவர் தாக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே செங்குட்டுவேல் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.
அப்போது, அவருடன் நின்று கொண்டிருந்த நண்பர்கள் முகம்மது மாலிக், விக்னேஷ் ஆகிய இருவரும் தடுத்ததில் அவர்களுக்கும் வெட்டு விழுந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், ரத்தவெள்ளத்தில் மிதந்த செங்குட்டுவேலை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு நண்பர்கள் மீட்டுக் கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே செங்குட்டுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். முகம்மது மாலிக், விக்னேஷ் ஆகிய இருவரும் வெட்டுக் காயங்களுடன் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையிலான காவலர்கள், தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் தொழிற்போட்டி மட்டுமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய பகுதியில் ரவுடி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓசூரில் கள்ளநோட்டு புழக்கம் : ஒருவர் கைது