பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாசம் (30). இவருக்கும் கோவை மாவட்டம் நாகராஜபுரத்தைச் சேர்ந்த ரேவதி (26) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக ரேவதி தனது பெற்றோருடன் வசித்துவந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனைவி வீட்டுக்குச் சென்ற பிரகாசம் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து பிரகாசத்தின் சகோதரி சசிகலா தனது சகோதரனின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சசிகலா வீட்டிற்கு வந்து வழக்கை திரும்பப்பெறக்கோரி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் சசிகலா மற்றொரு புகாரையும் அளித்துள்ளார்.
ஆனால் பெரம்பலூர் காவல் துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த சசிகலாவும் அவரது உறவினர்களும் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இப்போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: 'பருப்பு, எண்ணெய் கிடைக்கல' - ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!