பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவினால் உயிரிழந்தவரின் உடல்களை அடக்கம் செய்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய தங்களுக்கு வாய்ப்பு தரும்படி கடந்த 13ஆம் தேதி ’பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இண்டியா’ அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் துறைமங்கலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண் ஒருவர் கரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை அனைத்துவித பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் நல்லடக்கம் செய்யும்படி, சௌபாக்கியா நகரைச் சேர்ந்த செல்வராஜ், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இண்டியா அமைப்பினரைத் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
அதன்படி பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இண்டியா அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது இக்பால் தலைமையிலான குழுவினர், டி.இ.எல்.சி கல்லறைத் தோட்டத்திற்கு விரைந்தனர். அங்கு அரசு வழிகாட்டுதல்களின்படி உயிரிழந்த பெண்ணின் உடலை கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.
கரோனாவால் உயிரிழந்த கிறிஸ்தவ பெண்ணின் உடலை இந்து, முஸ்லீம்கள் இணைந்து அடக்கம் செய்த சம்பவம் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : 'என்னடா இது...மதுரக்காரனுக்கு வந்த சோதனை' வசனப்புகழ் நடிகர் பவுன்ராஜ் மரணம்