இந்திய வேளாண் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் மசோதாவை சட்டமாக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செப்.27ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மோடி அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் நேற்று (செப்.28) திமுக தலைமையில் தோழமைக் கட்சிகளின் சார்பில் வேளாண் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்தவகையில், பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் செட்டிகுளம், கொளக்காநத்தம், குன்னம், லப்பைக்குடிக்காடு, கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை உள்ளிட்ட ஏழு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருத்தல், பேரிடர் கால விதிமுறையை மீறியதாகக் கூறி ஆ.ராசா உள்ளிட்ட ஆயிரத்து 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு - காய்கறிகள் விலை குறைய வாய்ப்பு