பெரம்பலூர்: சிறுவாச்சூர் பகுதியிலுள்ள அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் பிரசித்திப் பெற்றதும், புகழ் பெற்றதுமாக விளங்குகிறது.
இந்த கோயிலுக்குச் சொந்தமான பெரியசாமி மலையில் அக்டோபர் 5ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் சுடுமண் சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து கோயில் நிர்வாகம் புகார் அளித்த நிலையில், அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சிறுவாச்சூர் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பெரியாண்டவர் திருக்கோயிலில் கடந்த 22 நாள்களுக்கு முன்னர் 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிலைகள் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடந்த நிலையில் அந்த 13 கற்சிலைகளை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்றிரவு (அக்.07) உடைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைக் கைது செய்யக்கோரி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுவாச்சூர் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமூக விரோதிகளைப் பிடிக்க தீவிரம் காட்டும் போலீஸ்
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, சம்பவ இடத்திற்குச் சென்று சேதமடைந்த சிலைகளை ஆய்வு செய்து, சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் பொதுமக்களிடம் உறுதியளித்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
மேலும், இச்சம்பம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் சிறுவாச்சூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த நாதன் என்பவரைப் பிடித்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பூண்டி மாதா சிலை உடைப்பு: திருவள்ளூரில் பதற்றம்