பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பசும்பலூர் கிராமத்தில், மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நள்ளிரவில் அவசர அழைப்பு எண்ணான 100-க்கு இளைஞர் ஒருவர் போன் (Phone) செய்துள்ளார்.
அதில், கணவன் - மனைவி, ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், உடனே போலீசாரை வரச் சொல்லுங்கள் எனத் தெரிவித்த அந்த நபர், ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் 100-ஐ தொடர்பு கொண்டு, தூக்கம் வராததால் விளையாட்டுக்கு போன் போட்டு ஃபன் (Fun) செய்ததாகத் தெரிவித்து இணைப்பைத் துண்டித்து விட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், முதலில் வந்த அழைப்பின் அடிப்படையில் வி.களத்தூர் போலீசார் உள்ளிட்ட பொதுமக்கள் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்பட்ட கிராமத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகத் தூக்கத்தைத் தொலைத்து பரபரப்புடன் தெருத்தெருவாக தேடி அழைந்த நிலையில், அந்த தகவல் உண்மைக்கு மாறானது எனத் தெரிந்ததும் போன் போட்ட வாலிபரைத் தேடி பிடித்து விசாரித்துள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த வாலிபர் பெயர் ரமேஷ் என்பதும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரிடமும் 16 X 32 எவ்வளவு என்றும், போலீஸ் கணக்கிற்கு விளக்கம் அளிக்கலாமே எனவும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்துள்ளார். பின்னர் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. நள்ளிரவில் நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்த கார்.. பேருந்தின் மீது மோதி கோர விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி!