பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, வெண்பாவூர், பாடாலூர், முருக்கன்குடி, டி.களத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் உள்ளன. இந்நிலையில் இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்துவருகின்றன.
இதனிடையே பெரம்பலூர் - அரியலூர் சாலையில் பேரளி என்ற இடத்தில் அழகிய ஆண் மயில் ஒன்று சாலையை கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடிபட்டு கிடந்தது. இதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து வனத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் வனத் துறையினர் வராததால் பொதுமக்களே அடிபட்ட மயிலை மீட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் தற்போது கோடை காலம் என்பதால், வனப் பகுதிகளில் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் சாலையை கடக்கும்போது மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகள் அடிபடுவதும் வாடிக்கையாகிவருகிறது. இதைத் தடுப்பதற்காக வனத் துறை நிர்வாகம் வனப்பகுதிகளில் கூடுதல் நீர்த்தொட்டி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.