பெரம்பலூரில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பல இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிமுக பிரமுகர் மீது நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அருள் புகார் கொடுத்தார். அதேபோல், பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் வெளியிட்டார். இதனையடுத்து, புகார் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் அருள், தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மே 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அருளை வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், போலீஸார் அழைத்துச் செல்லும்பொது செய்தியாளர்களிடம் பேசிய அருள், “இந்த பாலியல் புகார் தொடர்பாக என் மீது பொய்யான வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. என் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவியாளரை அழைத்து பொய்யான வாக்குமூலம் பெற்று ஆதாரங்களை அழிக்க முற்படுகின்றன்றனர். சிறையில் இருந்து நான் வெளியே வந்தவுடன் இந்த பாலியல் புகார் தொடர்பாக மேலும் பல வீடியோ, ஆடியோ ஆதாரங்களை வெளியிடுவேன்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.