பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், மத்திய அரசு நடைமுறைப்படுத்தப்பட உள்ள மின்சார திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாட்டில் விவசாய மோட்டார்களுக்கான இலவச மின்சாரம் ரத்தாகும் அபாயம் உள்ளது என்றும்; மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்கெனவே பாதிப்பில் உள்ள விவசாயிகள் மீண்டும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வேளாண் தொழில் நலிவடையும் சூழ்நிலை ஏற்படும் என உரக்க தெரிவித்தனர்.
மேலும் மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது என்றும்; தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளைப் பாதிக்கும் இந்த சட்டத்தை ஒப்புக்காக எதிர்ப்பு தெரிவிப்பதை கைவிட்டுவிட்டு மத்திய அரசிற்கு வலுவாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
விவசாயிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அரசைக் கண்டித்து கண்டன முழக்கமிட்டனர். தங்களுடைய கோரிக்கை நிறைவேறாவிட்டால், அனைத்து விவசாயிகளையும் திரட்டி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதாகவும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து கரோனா வைரஸ் ஊரடங்கு அமலில் உள்ளதால், போராட்டத்தில் ஈடுபட்ட50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 'பருத்தி குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.6 ஆயிரம் கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும்'