தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாளுக்கு நாள் தொற்று வேகமாக பரவிவருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை ஐந்து பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் தீயணைப்புத்துறை குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் தீயணைப்பு வீரர் ஒருவருக்கும் அருகிலுள்ள கேகே நகர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
இது குறித்து பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பெரம்பலூரை சுற்றியுள்ள எட்டு கிலோமீட்டர் பகுதிகளில் இன்று முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனை, மருந்தகங்களைத் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்காது. இந்த தினங்களில் எவ்வித வாகனப் போக்குவரத்திற்கும் அனுமதி கிடையாது. இந்தக் காலத்தில் உத்தரவை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். தடை காலத்தில் நடமாடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... முழு ஊரடங்கு உத்தரவு - காவல் உயர் அலுவலர்கள் ஆலோசனை