பெரம்பலூர்: அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான R.T. இராமச்சந்திரன், தமிழ்நாடு முதலமைச்சரையும், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதியையும் கண்டித்து காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில் கூறியதாவது
“தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளின் மனதில் நீட் தேர்வு ரத்து என்ற கருத்தை விதைத்து ஏமாற்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், அவரது மகனான சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக நீட் தேர்வில் விலக்கு வாங்கி தருவதாகக் கூறி, அரியலூர் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதாவை, உச்ச நீதிமன்றம்வரை அலைக்கழிக்கவிட்டு, அவருக்கு சரியான வழிகாட்டாததால், அனிதா தற்கொலை செய்து தன்னை மாய்த்துக் கொண்டார்.
அப்போதும் அனிதா உயிரிழப்பை வைத்து திமுக அரசியல் செய்துகொண்டிருந்தது. அதே பாணியில், தேர்தலுக்கு முன்பு நீட் தேர்விற்கு விலக்கு வாங்கி தருகிறோம், அதற்கான யுக்தி தங்களிடம் இருக்கிறது என்று பொய் பரப்புரை செய்தனர்.
ஆனால் மாணவ-மாணவிகளிடம் நீட் தேர்வு விலக்கு நம்பிக்கையை விதைத்து தற்போது நீட் தேர்வு விலக்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்று பேச்சை மாற்றி வருகின்றனர்” என தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்ட காணொலி பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.