பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி. களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பிரபு. அதே பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் செல்வராஜ். இந்நிலையில் செல்வராஜ், பிரபு ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சித்துவந்துள்ளனர்.
இதற்கிடையில் செல்வராஜ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வி. களத்தூர் ஊராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்டுள்ளார். இதனையறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் பிரபு, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செல்வராஜை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த செல்வராஜ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் வி. களத்தூர் காவல் துறையினர் ஊராட்சி மன்றத் தலைவர் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் ஊராட்சி மன்றத் தலைவர் பிரபு, தன்னை செல்வராஜ் சாதி அடிப்படையில் திட்டியதாகப் புகாரளித்தார். அதனடிப்படையில் திமுக கிளைச் செயலாளர் செல்வராஜ் மீது தீண்டாமை ஒழிப்புப் பிரிவின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கஞ்சா மூட்டைகளுடன் பிரபல ரவுடியின் கூட்டாளி கைது