பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளையும், கழனிவாசலில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடையினையும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குஜராத் மாநில கீழமை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மேல்முறையீடு செய்வதற்கு தகுந்த கால அவகாசம் வழங்கப்படாத நிலையில் மத்திய அரசு அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது.
அதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கில் தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரது சிறை தண்டனைக்கு தடை விதித்தது. இதன் மூலம் மீண்டும் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் போதிய முகாந்தரம் இல்லை என தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சங்பரிவார் அமைப்புகள் சார்பாக திட்டமிடப்பட்டு, நீதித்துறையை பயன்படுத்தி ராகுல் காந்தியை பழிவாங்கி நாடாளுமன்றத்திற்குள் வரவிடாமலும், 2024ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கும் செய்யப்பட்ட திட்டமிட்ட செயல் அம்பலமானது என்றும், ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதித்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும், மேலும் பாஜக தமிழ்நாட்டை குறி வைத்து அரசியல் செய்து வருகிறது எனக் கூறினார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாக எவ்வளவு முயற்சி செய்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியவில்லை. வேரூன்றவதற்கு பல முயற்சிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒன்று தான் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை, சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்படுமே தவிர, அது தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றார்.
அவர்கள் யார் என்று நாட்டு மக்களுக்கு தெரியும், என்ன வேடமிட்டாலும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியது. மேலும், வரும் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் உணர்த்துவார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பயன்பாட்டுக்கே வராத திட்டத்திற்கு வரி விதிக்கும் மாநகராட்சி... திணறும் திருப்பூர் மக்கள்!