கரோனா வைரஸ் நோய்த்தொற்று தமிழ்நாட்டில் அதிகமாகப் பரவி வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 547ஆக உள்ளது. இதில் 360 பேர் குணமடைந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 178 பேர் திருச்சி, சென்னை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் உள்ள பாடாலூர், செட்டிகுளம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் கடந்த ஒரு வார காலமாக கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே பாடாலூர் ஊராட்சியில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத் தடுக்க வியாபாரிகள் சங்கம் ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்து இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை, ஒரு வார காலம் முழு கடையடைப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி பாடாலூர் கடைவீதி பகுதிகளில் மருந்தகங்கள் தவிர, அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க ஊராட்சி நிர்வாகம் சார்பில், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் செட்டிகுளம் ஊராட்சியில் மருந்தகங்கள் தவிர, அனைத்துக் கடைகளும் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என செட்டிகுளம் வியாபாரிகள் சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டு, செட்டிகுளம் பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு ஊராட்சிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி உள்ளிட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.