பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் புகார் எழுந்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் பேசியதாக ஆடியோ ஒன்றை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான அருள் வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது பாலியல் புகார் கொடுத்த வழக்கறிஞர் அருள் பொய்யான ஆடியோ அளித்ததாக கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, இந்த வழக்கு சம்பந்தமாக பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் வருகின்ற மே 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து வழக்கறிஞர் அருள் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிமுக எம்எல்ஏ-வை விசாரிக்காமல் புகார் கொடுத்தவர்களை கைது செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.