பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், புதிய காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “பெரம்பலூர் மாவட்டத்தின் மையத்திலேயே, மிக நீண்ட தூரத்திற்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் சாலை போக்குவரத்தில் ஏற்படும் விபத்துகளுக்குப் போக்குவரத்து விதிமீறல்கள் தான் காரணம்.
முதல் கட்டமாக, மாவட்ட காவல் துறை சார்பாகத் தலைக்கவசம் அவசியம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு அதிவேகமாக, அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு வாகனங்களை இயக்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் சாலை போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கிய இடங்களில் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தும் பணியும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கண்காணிப்பு படக்கருவிகள் மூலம் கொண்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் காவல் துறை சார்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் வணிகர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.