பெரம்பலூர் மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கஞ்சா செடி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த வெங்கடேசன், பெரம்பலூர் சங்குப்பேட்டையைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 143 கிராம் எடையுள்ள 33 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைப்போல் பெரம்பலூர் நகர பகுதியில் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான காவலர்கள் ரோந்துப் பணியில் இருந்தபோது ரோவர் வளைவு அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த பெரம்பலூரைச் சேர்ந்த செல்வக்குமார், அவரது மனைவி அஞ்சலி ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
அதையடுத்து அவர்களிடமிருந்து ரூ. 3,500 மதிப்புள்ள கஞ்சா, இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.
இதையும் படியுங்க: சென்னை முழுவதும் கஞ்சா விநியோகிக்க ஏற்பாடு - வீட்டில் பதுக்கிய 210 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்!