வேலைவாய்ப்பு மற்றும் இதர பிரச்னைகளுக்காக தங்களைத் தேடி வரும் பெரம்பலூர் நகரைச் சேர்ந்த இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், வீடியோகிராபர் ஒருவர் உதவியுடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள், இந்த பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய ஆளுங்கட்சியினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், 'பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பல குடும்பப் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி மிரட்டி ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் போலி பத்திரிகையாளர் மற்றும் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதை வீடியோ மூலம் பதிவு செய்து வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முறையாக விசாரித்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து விவரங்களை வெளியிடாமல் ரகசியம் காக்கப்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பாலியல் புகார் மீது விசாரணை நடத்த கூடுதல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படையினர் விசாரணையை தொடங்கிவிட்டனர். போதிய ஆதாரங்கள் கிடைத்த பிறகு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.