பெரம்பலூர் : மூன்று ரோடு பகுதியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் முகமது அலி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு அமைப்பாக செயல்படக்கூடிய ஆவின் நிறுவனம், நிர்வாக சீர்கேடுகளால் கடுமையான இழப்பில் செயல்பட்டு வருகிறது.
பெரும்பாலான மாவட்ட ஒன்றியங்களிலும் செயல்படக்கூடிய ஆவின் நிறுவனம், பால் வழங்கியுள்ள உற்பத்தியாளர்களுக்கு மூன்று மாதங்கள் வரையிலான நிலுவைத் தொகையை வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. சுமார் 500 கோடி வரை நிலுவையில் உள்ளது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சூழலில், உடனடியாக பாக்கித் தொகை முழுவதையும் வழங்க வேண்டும். சமீபத்தில் மாவட்ட ஒன்றியங்களில் அளவுக்கு அதிகமாக அலுவலர்களை நியமிப்பதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசு தலையிட்டு இதன் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். ஆவினை பாதுகாத்திட வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அக்டோபர் 27ஆம் தேதி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்