கோவிட்-19 பெருந்தொற்று நோய் பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் பூட்டுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு மூன்றாம் கட்டமாக நடப்பு மாதம் 17ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால் பல்வேறு தரப்பு தொழில்துறையினர் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்து பணி புரியும் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தமது வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். மூன்றாம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின்போது, மத்திய அரசு நாடு முழுவதும் புலம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களில் சொந்த ஊர்களுக்கு திரும்ப விருப்பமுள்ளவர்களை அங்கு கொண்டு சேர்க்க சிறப்பு ரயில்களை இயக்குவதுடன் அனைத்து மாநிலங்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
அதனையேற்று தமிழ்நாடு அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில் 19 ஐஏஎஸ் அலுவலர்களை மாநிலம் வாரியாக நியமித்து நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அதற்கான பணிகளை மேற்கொள்ள ஆணை பிறப்பித்தது.
அதேபோல் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி, அவர்கள் பாதுகாப்பாக ரயில் நிலையங்கள் அடைய போக்குவரத்து ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பல ஏற்பாடுகளை செய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலும் பிகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சலவைகல் பதிப்பது, டைல்ஸ் ஒட்டுவது, மரத்தச்சு வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்படி அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மாவட்ட ஊர்காவல் படை மண்டல தளபதி ராம்குமார் உரிய ஏற்பாட்டினை செய்தார். அதனைத் தொடர்ந்து நேற்று 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், இன்று 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் சாலை மார்க்கமாக செல்ல பேருந்தை வாடகைக்கு அமர்த்தி தங்கள் சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.