தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடுமையான வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்ததால் குடிநீருக்காகவும், பிற தேவைகளுக்கும் மக்கள் தவித்துவருகின்றனர். குடிநீர் விநியோகம் இல்லாததால் இரவு பகல் பாராமல் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலும் குடிநீர் பிரச்னை தொடர்ந்து நிலவுகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் தேர்தல் வாக்குறுதியில், பெரம்பலூர் மாவட்டம் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து இருந்தார். அதன்படி, தற்போது தண்ணீர் வண்டிகள் மூலம் இலவசமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. பெரம்பலூர் நகர்ப்புற பகுதிகளிலும், கிராமங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வண்டிகள் மூலம் இலவச குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்களின், குடிநீர் பிரச்னை தீர்க்க இலவசமாக குடிநீர் வழங்கிவருவதை பொதுமக்கள் வரவேற்த்துள்ளனர்.