பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதனிடையே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில் ''சிறு பாசன ஏரிகள், குளங்கள், குடிமராமத்துப் பணிகள் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. ஏரிகள் குளங்களில் உள்ள வேலிகள் அகற்றப்படவில்லை. ஆறு மாத காலமாக கோடை உழவு மானியம் வழங்கப்படவில்லை. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண்துறை அமைச்சர் பேசும்பொழுது விவசாயிகளுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யமாட்டோம் என்று பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது'' என்றனர்.
அப்போது மேற்கூறிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இந்தப் போராட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: ஆசீர்வாதம் செய்கிறேன் என பர்சை பறித்துச் சென்ற 3 திருநங்கைகள்!