பெரம்பலூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், அதிமுக ஒற்றைத் தலைமை குறித்த மதுரை மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
எங்களது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒற்றைத் தலைமை குறித்து மதுரை மாவட்ட கழகச் செயலாளர் ராஜன் செல்லப்பா கூறிய கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அவர் சொன்னதைப்போல், ஒற்றைத் தலைமையும், வலிமையான தலைமையாக சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
எம்ஜிஆர் ஆகட்டும், ஜெயலலிதா ஆகட்டும் இருவரும் தனது குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு கழகமே தனது குடும்பம் என வாழ்ந்து மறைந்தவர்கள். இரு தலைவர்கள் உருவாக்கி காத்திட்ட இந்த அதிமுக கழகத்தை, யார் தனது குடும்பத்திற்காக மிரட்டினாலும் சரி, பிளவுபடுத்த எண்ணினாலும் சரி அதிமுகவில் மீண்டும் ஒரு சசிகலாவாகத்தான் தொண்டர்கள் அவர்களை நினைப்பார்கள் என்பதை தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்து வாழவேண்டுமே தவிர, தனது குடும்பத்திற்காக கழகத்தை வளைக்க நினைப்பது, அதிமுக கழக தொண்டர்களுக்கு எல்லாம் வேதனை அளிக்கிறது என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான மேலும் செய்திகளுக்கு: