ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட போதும் தொழில்நுட்பத் துறைகளினால், வீட்டிலிருந்தபடியே வேலைசெய்ய முடிந்தது. ஆனால், உடலில் வலியுடன் வியர்வை நிலத்தை சிந்தி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அது சாத்தியமில்லை.
நிலத்தை பண்படுத்தி, நீர் பாய்ச்சி, விதைத்து, களையெடுத்து எனப் பயிர்களை உண்டாக்க பல படிநிலைகளை விவசாயிகள் தாண்ட வேண்டியிருக்கிறது. இதற்கிடையில், எதிர்பாராமல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் அவர்களுக்கு பெரும் பாரமாகிவிட்டது. விவசாயத்தையே மூலதனமாக நம்பி வாழும் பெரம்பலூர் விவசாயிகள் தற்போது செய்யவதறியாது அமைதி காக்கின்றனர்.
பெரம்பலூரில் விவசாயம்
பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னவெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கம்பு, எள் உள்ளிட்ட பயிர்களும் அவ்வப்போது பயிரிடப்படுகின்றன. குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயத்திற்கு மவுசு அதிகம்.
செட்டிகுளம், பாடாலூர், நக்கசேலம், சத்திரமனை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயமும், குன்னம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி, மக்காச்சோள பயிர்களும் அதிக அளவில் சாகுபடிசெய்யப்படுகின்றன.
இந்தாண்டு, சின்ன வெங்காயம் மூன்றாயிரத்து 500 ஹெக்டர் பரப்பளவிலும், பருத்தி 20 ஆயிரத்து 526 பரப்பளவிலும், மக்காச்சோளம் 56 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடிசெய்யப்பட்டது. இதனூடே, நெல் சாகுபடியும் நடைபெற்றது.
விவசாயிகளின் பிரச்னை
ஊரே முடங்கினாலும் உழவன் முடங்க முடியாது எனப் பேசத் தொடங்குகிறார், விவசாயி ஆறுமுகம். அவர் பேசுகையில், “விவசாயப் பொருள்கள் உற்பத்தி செய்யவும், அதனை விற்பனைக்கு எடுத்துச் செல்லவும் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.
இதனால், உற்பத்திசெய்யப்பட்ட பயிர் வகைகள் விற்பனைக்கு வருகிறது. ஆனால், அவை இந்தப் பருவத்தில் உற்பத்திசெய்யப்பட்டவை. தற்போது, அடுத்த சாகுபடிக்கான பருவம் வந்துவிட்டது.
அதற்கான, உழவு வேலைகளைத் தொடங்கலாம் என நினைத்தால், முதலீடு செய்ய பணமில்லை. விதை, உரம், கூலியாள்களுக்கு ஊதியம் என நிறைய செலவுசெய்ய வேண்டிய சூழலிலிருக்கிறோம். இதற்காக, நகை, வீடு என எங்களிடமிருக்கும் பொருள்களை அடகு வைத்து, வங்கிகளில் கடன் கேட்டால், மூன்று மாதம் கடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
இந்தச் சூழலில், நாங்கள் விவசாயம் செய்யாமல்விட்டால் உணவிற்கு என்ன செய்ய முடியும். தளர்வுகள் அறிவித்த நிலையிலும், உரம், விதைநெல் எடுத்துவர போக்குவரத்து வசதியில்லை. அரசு தனிக்கவனம் எடுத்து, எங்களுக்கு உதவவில்லையென்றால் நிலைமை மோசமாகிவிடும்” என்றார்.
இது குறித்து விவசாயி கார்த்திகேயன், “விவசாயத்தில் மூன்று வகை செலவுகளை சமாளிக்க வேண்டியுள்ளது. உழவு ஓட்டும் செலவு, விதைச் செலவு, உரம் செலவு உள்ளிட்ட மூன்று செலவுகளுக்கும், வங்கிகளில் பெறும் வட்டியில்லா கடன்களைத்தான் நம்பியிருக்கிறோம்.
இந்நிலையில், வங்கிகளில் கடன் பெற முடியாது என்பது எங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சி. அடுத்த சாகுபடிசெய்ய வேண்டுமென்றால், அதற்கு மூலதனமாக மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு மானியம், கடனுதவி வழங்க வேண்டும்” என்றார்.
எங்கோ முகம் தெரியாத ஒருவரின் பசியைப் போக்க, தன்னுடைய வயலில் கடுமையாக உழைக்கும் மகத்தானவர்கள்தான், விவசாயிகள். விளைந்த பொருள்கள் அத்தனையும் விற்பனைக்கு அனுப்பிவிட்டு, அடுத்த சாகுபடிக்குத் தயாரான அவர்களுக்கு, அரசு உடனடியாக உதவுவதே மாண்புடைய செயலாகும்.
இதையும் படிங்க: உணவின்றி தவித்த பழங்குடியினருக்கு சொந்த செலவில் உணவளித்த இருளர் சங்கத் தலைவர்!