பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள சாத்த நத்தம் கிராமத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது. அந்தக் கல்வெட்டு முன்பு ஊர் கிணற்றடியில் இருந்தது. அது தற்போது தொடக்கப் பள்ளியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் கி.பி 1847ஆம் ஆண்டில் நன்னை கிராமத்தில் உள்ள திருமேனி அழகர், வரதராச பெருமாள், ஒப்பணப் பிள்ளையார் ஆகிய மூன்று கோயில்களின் பூசை வழிபாட்டிற்கு இலுப்பைத் தோப்பும், ஒப்பண பிள்ளையார் கோயில் பூசை வழிபாட்டிற்கு ஒரு ஏக்கருக்கு சிறிது குறைவான கணக்கில் நிலமும் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வெட்டில் கூறப்படுகிறது.
அதேபோலவே குன்னம் வட்டத்தில் உள்ள பேரளி பகுதியில் எறையூர் பிரிவு சாலையில் மலையடி தெப்பக்குளம் உள்ளது. இதன் கரையில் ஒரு கல்வெட்டு உள்ளது.
இந்தக் கல்வெட்டில் பேரளியைச் சேர்ந்த நல்லபெருமுடையார் என்பவரால் இக்குளம் கி.பி 1831ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்குளத்தைச் சுற்றிலும் இலுப்பை, புளி, மா எனப் பலவித மரங்கள் அடங்கிய தோப்பினை அவர் உருவாக்கியுள்ளார்.
இந்தத் தோப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வருவாயில் பேரளி கிராமத்தில் அழகீசுபர சுவாமி, வரதராசப் பெருமாள் ஆகிய கோயில்களுக்குப் பாதியும், தெப்பக்குளத்தைப் பராமரிப்பதற்குப் பாதியும் செலவிட வேண்டும் என இந்தக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இதையும் படிங்க: கை அறுக்கப்பட்ட கிருஷ்ணர் சிலையை விற்க முயன்ற இருவர் கைது!