பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் எறையூர் சர்க்கரை ஆலையில் அறவை துவக்கம் இன்று (டிச 08) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்ற அறவையைப் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் துவக்கி வைத்தார்.
நடப்பு அரவைப் பருவத்திற்கு 10,616 ஏக்கர் பதிவு கரும்பு பரப்பளவிலிருந்து 3.25 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு மகசூல் எதிர் பார்க்கப்பட்டு ஆலை அரவை மேற்கொள்ளவும், மேலும் 9.85% அளவிற்குச் சராசரி சர்க்கரைக் கட்டுமானம் எடுத்திடவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மொத்த மகசூல் மதிப்பீட்டு அளவான 3.25 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அளவில் சுமார் 10 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அந்த ஆலைக்குப் பெரம்பலூர் சர்க்கரை ஆலையிலிருந்து கரும்பு பரிமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டும் இல்லாமல், 110 நாட்கள் அரவை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் தினசரி ஆலை அரவை 3,000 மெட்ரிக் டன் அளவிற்கு மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் நடப்பு அரவைப் பருவத்திற்குக் கரும்புகளை வழங்கியுள்ள பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்பிற்கு ரூபாய் 2968.87 வீதம் நியாயமான ஊதிய விலை வழங்கப்பட உள்ளது என ஆலை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆதித்யா எல்-1ல் இருந்து சூரியனை பற்றி விவரங்கள் விரைவில்... வானியற்பியல் ஆய்வக இயக்குநர் தகவல்!